×

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோவை பரப்பியது பாஜ: முன்னாள் கார் டிரைவர் அதிரடி பேட்டி

* பிரஜ்வலை கைது செய்ய வலியுறுத்தி கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தள தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் மாநில அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோக்களை கூட்டணி கட்சியான பாஜவே வெளியிட்டது அம்பலமாகி உள்ளது. ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜ மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவிடம் வழங்கியதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் கூறியிருக்கிறார். இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி மஜத எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஆவார். இந்த தொகுதிகளில் கடந்த வாரம் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியானது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து விசாரிக்க, கடந்த சனிக்கிழமை முதல்வர் சித்தராமையா, மாநில சிஐடி போலீஸ் ஏடிஜிபி பிஜய் குமார் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்தார். எஸ்.ஐ.டி இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் வேலை செய்த பணிப்பெண் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் தேவ கவுடாவின் குடும்பத்திற்கும், மஜத கட்சிக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கிடையே பாஜவை சேர்ந்த தேவராஜ் கவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் அந்த பென் டிரைவை காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்திருப்பார். இந்த விவகாரத்தில் பயனடைவது காங்கிரஸ் தான். எனவே அரசியல் ஆதாயத்திற்காக ஹாசன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேல், அந்த வீடியோக்களில் இருந்த பெண்களின் மானத்தை அடமானம் வைத்ததாக தேவராஜ் கவுடா கூறியிருந்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த பென் டிரைவை பாஜ மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவிடம் வழங்கியதாகவும், அவரைத்தவிர வேறு யாரிடமும் அந்த வீடியோவை வழங்கவில்லை என்றும் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக டிரைவர் கார்த்திக் கூறியதாவது:

நான் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் 15 ஆண்டுகள் டிரைவராக வேலை பார்த்தேன். ஆனால் கடந்த ஓராண்டாக நான் அவரிடம் இல்லை. என் நிலத்தை பறித்து, என் மனைவியை அடித்து துன்புறுத்தி, என்னை கடும் மன உளைச்சலுக்கு பிரஜ்வல் ஆளாக்கினார். அதனால் தான் நான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஓட்டுநர் வேலையிலிருந்து விலகி, அவரைவிட்டு விலகி வந்தேன். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை பாஜ தலைவர் தேவராஜ் கவுடாவிடம் கொடுத்தேன்.

அவரை தவிர யாரிடமும் அந்த பென்டிரைவை நான் தரவில்லை. தேவராஜ் கவுடா அந்த பென் டிரைவை வேறு யாரிடமும் கொடுத்தாரா அல்லது பாஜவினரே அந்த வீடியோக்களை பரப்பிவிட்டனரா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது, நான் அந்த பென் டிரைவை காங்கிரஸ் தலைவர்களிடம் வழங்கியதாக கவுடா குற்றம்சாட்டுகிறார். நான் அந்த பென் டிரைவை காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கொடுத்திருந்தால், நான் ஏன் அந்த பெண்களின் நீதிக்காக கவுடாவை நாடுகிறேன்? நான் காங்கிரஸ் தலைவர்களிடமே சென்றிருக்க மாட்டேனா?

இதுசார்ந்த அனைத்து ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கியிருக்கிறேன் என்றார். தேவராஜ் கவுடாவிடம் மட்டுமே ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை டிரைவர் கார்த்திக் கொடுத்த நிலையில், அதைபாஜவினர்தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் தொடர்பான வீடியோவை பாஜவே வெளியிட்ட விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜ மூத்த தலைவரான தேவராஜ் கவுடா, கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹொளேநரசிபுரா தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு எச்.டி.ரேவண்ணாவிடம் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட 3000 வீடியோக்களும் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த வீடியோக்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் காங்கிரசார் மற்றும் மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

* பெண்களை இழிவுபடுத்துவதை பாஜ பொறுத்துக்கொள்ளாது – அமைச்சர் அமித் ஷா ஆவேசம்
பெண்களை இழிவுபடுத்துவதை பாஜ ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமித் ஷா,” பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஊடகங்களில் வெளியான ரேவண்ணா பாலியல் துஷ்பிரயோகம் விவகாரம் மிகவும் வேதனையளிக்கிறது. அதனை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

பாஜவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கர்நாடகாவில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகின்றது. கர்நாடகாவில் காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ளது. இந்த விவகாரம் அவர்கள் கவனத்துக்கு வந்திருக்க வேண்டும். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? சட்டம் -ஒழுங்கானது மாநில பிரச்னை என்பதால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது ” என்றார்.

* கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
பிரஜ்வல் ரேவண்ணா செக்ஸ் வீடியோ பரவியதையடுத்து நேற்று மஜத ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூருவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் கூடியது. இதில் மஜத நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்திய பிரஜ்வல் ரேவண்ணாவை சஸ்பெண்ட் செய்து முடிவு எடுத்தனர். பின்னர் பிரஜ்வல் சஸ்பெண்ட் பற்றிய அறிவிப்பு வெளியானது.

The post முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோவை பரப்பியது பாஜ: முன்னாள் கார் டிரைவர் அதிரடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM ,Deve Gowda ,BJP ,Karnataka ,Prajwal ,Bengaluru ,Prajwal Revanna ,Janata Dal ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ...